“திமுக அரசுக்கு கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்தும் சக்தி இல்லை” - ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம்
Updated on
1 min read

பழனி: தமிழகத்தில் கொலை, கொள்ளையை தடுத்து நிறுத்துகின்ற சக்தி, திமுக அரசுக்கு இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறியுள்ளார்.

சென்னை செல்வதற்காக இன்று (புதன்கிழமை) திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அங்கு, அவர் செய்தியாளர்களிடம் கூறியது: "காவிரி பிரச்சினையில் 18 ஆண்டுகள் நடைபெற்ற நடுவர் மன்றத்தினுடைய இறுதி தீர்ப்பினை மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெற்றுக்கொடுத்தார். பெற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல் இறுதி தீர்ப்புக்கான மத்திய அரசின் அரசாணையையும் பெற்றுக்கொடுத்தார். அரசாணைப்படி, காவிரி நீரை விடுவிடுக்க வேண்டி இரு ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முழுமையாக காவிரி நீரை பெறுவதற்கு சட்டபூர்வமாக முழு உரிமையும் நாம் பெற்றிருக்கிறோம். அதை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசின் கடமை. முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணியில் இருக்கிறார். அவர் கர்நாடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரை கேட்க வேண்டும். இல்லையெனில், இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறுவேன். கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவேன் என்ற நிலைப்பாட்டை முதல்வர் எடுக்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கைது விவகாரம் நீதிமன்ற விசாரணையில் தான் முழு விவரம் தெரிய வரும். நானோ, சசிகலாவோ, டிடிவி தினகரனோ மீண்டும் கட்சிக்கு வருகிறோம் என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை. அவராகவே கேள்வி கேட்டு அவராகவே பதில் சொல்லி கொள்கிறார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. முதல்வர் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் எடுக்கவில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை என நடக்கிறது. அதை தடுத்து நிறுத்துகின்ற சக்தி, திமுக அரசுக்கு இல்லை. எங்களின் நிலைப்பாடும், பொதுமக்களின் நிலைப்பாடும் திமுக அரசுக்கு எதிராக உள்ளது. அது, உள்ளாட்சித் தேர்தலிலும், 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்." என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in