முதலில் தவெக மாநாடு, அடுத்து 234 தொகுதிகளில் நடைபயணம்: விஜய் திட்டம் என்ன?

முதலில் தவெக மாநாடு, அடுத்து 234 தொகுதிகளில் நடைபயணம்: விஜய் திட்டம் என்ன?
Updated on
1 min read

சென்னை: இந்த ஆண்டு இறுதியில் தவெக மாநாடு நடத்தப்பட இருப்பதாகவும், திருச்சி அல்லது மதுரையில் மாநாட்டை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்துவது என கட்சிப் பணிகளில் நடிகர் விஜய் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து அரசியல் நகர்வுகளுக்கான அடுத்தக் கட்ட பணிகளை சத்தமில்லாமல் விஜய் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தினர் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த இருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகளை தற்போது கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஒரு மாநில மாநாடு, 4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் மாநில மாநாட்டை நடத்தி முடித்த பிறகு, அடுத்தடுத்து மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்கள், நடைபயணங்களை விஜய் திட்டமிட்டிருக்கிறார்.

மாநாட்டை பொறுத்தவரை மதுரையில் நடத்த இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது, அந்த பட்டியலில் திருச்சியும் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தின் மத்திய பகுதியாக திருச்சி இருப்பதாலும், அரசியல் தொடங்குபவர்கள் தங்களது முதல் அரசியல் பொதுக்கூட்டங்களை சென்டிமென்டாக மதுரையில் நடத்துவதாலும், தவெக முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தலாமா அல்லது மதுரையில் நடத்தலாமா என தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விரைவில் மாநாட்டுக்கான அதிகாரபூர்வ தேதி அறிவிக்கப்படும் என்றும், குறிப்பாக, நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகே மாநாடு நடைபெறும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே, தவெக மாநாடு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் நடத்தப்படலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த மாநாட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்து நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும், மண்டல மாநாடு, மாவட்ட பொது கூட்டங்களிலும் நடிகர் விஜய் பங்கேற்று பேசுவார் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in