

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவின் முதல் இரண்டு பகுதிகள் நடந்தன. முதல் பகுதியில் மேடையேறி மைக் பிடித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "நல்ல தலைவர்கள் வேண்டும், தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம்” எனப் பேசிய கருத்துகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. இரண்டாவது நிகழ்வில் அவர், மாணவர்கள் மத்தியில் பேச மாட்டார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அந்நிகழ்வில் பேசியவர், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக திமுக கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிப்பதாகவும். அவரின் பேச்சிலும் முற்றிலுமாக திராவிட அரசியலின் சாயல் தென்பட்டது. விஜய்யின் அரசியல் நிலைபாடு என்ன? திராவிடத்தைக் கையிலெடுத்து அரசியல் செய்கிறாரா விஜய்? திராவிட அரசியலை விஜய் கையிலெடுத்திருக்கிறார் என்பதற்கு முக்கியமான 3 காரணங்கள் இதோ...
1. திராவிடத்தை ஏற்ற விஜய்? - விஜய் பேசும்போது தன் உரையில் ஒன்றிய அரசு என்னும் வார்த்தையைப் பயன்படுத்தினார். மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சியை வலியுறுத்தும் வகையில்தான் திமுக ஒன்றிய அரசு என்னும் வார்த்தைப் பயன்படுத்தத் தொடங்கியது. ஆகவே, அந்த நிலைபாட்டில்தான் விஜய் ஒன்றிய அரசு என்னும் பெயரைப் பயன்படுத்துகிறார். அதுமட்டுமில்லாமல், Diversity is Strength என பன்முகத்தன்மை தான் பலம் எனப் பேசியதும், 'ஒரு நாடு ஒரு தேர்வு' என்பது கல்விக்கு எதிரானது, நீட் பிற்படுத்தப்பட்டோர் ஒடுக்கப்பட்டோர் வாய்ப்புகளைப் பறிக்கிறது என அவர் பேசியது எல்லாம் திராவிட கொள்கைகளின் நீட்சி என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது.
2. பாஜக எதிர்ப்பு! - மேலும், அவர் பேசும்போது, “நீட் ரத்து செய்யப்படுமா என்பது தெரியாது, அப்படியே அது நடந்தாலும் அதை நடத்தவிட மாட்டார்கள்” என பாஜகவை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
ஏன் பாஜக எதிர்ப்பு? - சென்ற முறை பேசியபோதும் பொய் செய்திகளைப் பரப்பும் சில அரசியல் கட்சிகள் என பாஜகவைத் தான் தாக்கிப் பேசினார் என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது சைக்கிளில் வந்தார் விஜய். அது பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பைச் சுட்டிக்காட்ட என்னும் வாதம் வைக்கப்பட்டது. தவிர, பாஜக கட்சியினரால்தான் அதிகமாக விமர்சிக்கப்பட்டார் விஜய். குறிப்பாக, ஜோசப் விஜய் என அவரின் லெட்டர் பேடில் போடப்பட்டிருந்ததை பாஜக கட்சியினர் விமர்சித்தனர். எனவே, சாதி, மத ரீதிதாக ஒடுக்கப்பட்ட விஜய்யை மீட்டது திராவிடம்தான். ஆதலால், தன் அரசியல் பாதையை விஜய் திராவிடத்தை நோக்கி திருப்பி இருக்கிறார் என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
3. திராவிடம்தான் தமிழக அரசியல்! - அதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் திராவிட சிந்தாந்தம்தான் மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்பதை உணர்ந்து விஜய் பேசியுள்ளளார். நாம் தமிழர் கட்சிப் பொறுத்தவரை அதன் தலைவர் சீமான் தமிழ் தேசியம் பேசி கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறார்.ஆனாலும் தற்போதுதான் ’மாநில கட்சி’ என்னும் பெயரைப் பெற்றுள்ளது. ஆகவே, தமிழகத்துக்கு திராவிட கொள்கை பேசும் அரசியல் அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறார்.
தவிர, தமிழகத்தைப் பொறுத்தவரை தீவிரமாக திராவிட கொள்கை பேசும் கட்சியாக திமுக இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை உட்கட்சிப் பிரச்சினை என சிலவற்றில் சிக்கி தன் அதிகாரத்தை இழந்திருக்கிறது. தற்போது, திராவிடத்தின் அடிப்படையில் அரசியலைக் கையிலெடுத்தால் நிச்சயமாக அதிமுகவுக்கு மாற்றாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்க முடியும் என்னும் அடிப்படையிலும் விஜய் தன் திசையைத் திராவிடத்தை நோக்கி செலுத்தியிருக்கலாம்.
ஆனால், திராவிடத்தின் நீட்சியாக இனிவரும் காலங்களில் அவர் செயலாற்றுவாரா? அவரின் பேச்சுக்கள் அதைப் பிரதிபலிக்குமா? தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக இருப்பாரா விஜய் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.