ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு சென்னை நீதிமன்றம் அனுமதி

ஜாபர் சாதிக் | கோப்புப்படம்
ஜாபர் சாதிக் | கோப்புப்படம்
Updated on
2 min read

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜாபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் கடந்த ஜூன் 26-ம் தேதியன்று கைது செய்தது. அதன்படி சிறை மாற்று வாரண்ட் மூலமாக திஹார் சிறையில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜாபர் சாதிக் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.அல்லி முன்பாக இன்று நடந்தது. இதற்காக சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட ஜாபர் சாதிக், நீதிபதி எஸ்,அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கின் விசாரணை அதிகாரியான சுனில் சங்கர் யாதவும் ஆஜராகியிருந்தார்.

அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, “ஜாபர் சாதிக் மீது போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக ஏற்கெனவே சென்னை மற்றும் மும்பையில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் பெரும் மூளையாக இவர் செயல்பட்டு இருப்பதும், இதன் மூலமாக கிடைத்த பெரும் தொகையின் மூலம் இவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு இருப்பதற்கு தேவையான சாட்சியங்கள், ஆவணங்கள் அமலாக்கத் துறை வசம் உள்ளது. இவர் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் சிறை மாற்று பிடிவாரண்ட் மூலமாக இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இவரை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமானது” என வாதிட்டார்.

அப்போது ஜாபர் சாதிக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ராஜரத்தினம், “சென்னை மற்றும் மும்பையில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு ஜாபர் சாதிக் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத் துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கைது செய்த 15 நாட்களுக்குள் கோரினால் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க முடியும் என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

அப்போது ஜாபர் சாதிக்கிடம், “நீங்கள் அமலாக்கத் துறையின் காவலில் செல்ல விரும்புகிறீர்களா?” என நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு, தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஏற்கெனவே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து விட்டேன் என்றார் ஜாபர் சாதிக். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிபதி, வரும் ஜூலை 18-ம் தேதியன்று அவர் தனது உறவினரை சந்திக்க அனுமதியளித்தும், வரும் ஜூலை 19-ம் தேதி மாலை அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

துன்புறுத்தியதாக தகவல்: முன்னதாக, நேற்றைய விசாரணையின்போது, அமலாக்கத்துறை எதுவும் துன்புறுத்தியதா என ஜாபர் சாதிக்கிடம் நீதிபதி எஸ்.அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு ஜாபர் சாதிக், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அமலாக்கத் துறை 3 நாள் தன்னை காவலில் எடுத்து விசாரித்து விட்டதாகவும், 4 முக்கிய நபர்களை இந்த வழக்கில் இணைக்க அமலாக்கத் துறை முயற்சித்து வருவதாகவும், அவர்களின் பெயரைக்கூற வேண்டுமென தன்னை துன்புறுத்துவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in