காமராஜர் பிறந்தநாளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

இது குறித்து வெளியிட்டப்பட்டிருக்கும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர்.

இத்திட்டத்துக்கு மக்களிடையே ஏற்பட்ட வரவேற்பினையும், மாணவ மாணவியர் இடையே ஏற்பட்ட எழுச்சியினையும் கருத்தில் கொண்டு 25.8.2023 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊராகிய திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், .முக.ஸ்டாலின் 15,7.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கிவைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உலகிகேற்கே முன்னோடியான திட்டமாகத் திகழ்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொள்வார்கள். திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in