

மும்பை: மும்பையில் கனமழை பெய்து வருவதால் இன்று (ஜூலை 13) அந்த நகருக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று காலை முதலே மழை பெய்து வருவதால், நகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நகரில் 61.69 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையின் சில பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது வருவதால், நகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நகரில் 61.69 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மும்பைவாசிகள் அவசியம் இல்லாவிட்டால் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழைக்காலம் என்பதால், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இரு இடங்களில் தொடர் மழையின் பாதிப்புகளை நிர்வகிக்கவும், தணிக்கவும் அதிகாரிகள் அதிக விழிப்புடன் உள்ளனர்.
மும்பை போக்குவரத்து காவல்துறை தனது எக்ஸ் தளத்தில், “அந்தேரி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எஸ்வி சாலையில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. இவற்றை பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.