“அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு” - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

“அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் வழக்கு” - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: “குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாக என்மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு வழக்கும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் இன்று அவர் அளித்த பேட்டி: “எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பேசினால் என்ன வழக்கு வரும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு தெரியாதா?. காந்தியைக் கொலை செய்தீர்கள். எங்கள் நடத்தையை குற்றம் சொல்கிறீர்கள். வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவீர்களா!.

எல்லா குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்துவிட்டு, தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பற்றி பேசுகிறார். தமிழக பாஜகவில் உள்ள ரவுடிகள் பட்டியலை 32 பக்க உளவுத் துறை அறிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அந்தக் கட்சியில் சேர்ந்த 261 குற்றவாளிகள் மீது 1977 வழக்குகள் உள்ளன.

என்னை ரவுடி எனக் கூறும் அண்ணாமலை எந்த காவல்நிலையில் என்ன வழக்கு என் மீது உள்ளது என நிரூபிக்க முடியாமா?. என்னை அவதூறாகப் பேசியதற்கு அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். இது கடைசி எச்சரிக்கை. மன்னிப்புக் கேட்காவிட்டால், அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடரப்படும்.

அதன்பின்னர் முன்ஜாமீனில் கூட வெளிவர முடியாது. எனவே, அண்ணாமலை மன்னிப்புக் கேட்கும் வரை விடமாட்டோம். பாஜக மாநிலத் தலைவர் இப்படி அவதூறகப் பேசிய விவகாரத்தை இந்திய அளவில் மக்களிடம் கொண்டு செல்வோம். அண்ணாமலையின் வாழ்க்கை தற்போது காங்கிரஸ் கட்சியிடம் உள்ளது.” என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in