Last Updated : 25 May, 2024 09:02 PM

4  

Published : 25 May 2024 09:02 PM
Last Updated : 25 May 2024 09:02 PM

“ஜெயலலிதா வழியில் ‘இந்துத்துவ’ கொள்கை...” - அண்ணாமலை சர்ச்சை பேச்சும், பின்புல அரசியலும்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், “ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்” என்னும் கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் விட்டுச் சென்ற இடத்தைப் பாஜக நிரப்பி வருவதாகவும் பேசியுள்ளார். அதற்கு, ஜெயலலிதா மதமாற்ற தடைச் சட்டத்தைக் கொண்டு வந்ததைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

இதற்கு அதிமுக தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட மற்ற மதங்களுக்குப் பொதுவாகத் திகழ்ந்தவர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்புகிறார். இந்து மதத்தை மட்டுமே சார்ந்தவர் என்று, அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் வேண்டுமென்றே பேட்டி கொடுப்பது கடும் கண்டனத்துக்குரியது” என்று கூறியுள்ளார்.

அண்ணாமலை பேச்சின் பின்னணி என்ன? - தமிழகத்தில் தங்களின் கட்சியை வளர்க்கப் பாஜக போராடி வருகிறது. குறிப்பாக, தனித்து நின்றால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்னும் அடிப்படையில் கடந்த காலத்திலிருந்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து வருகிறது. அப்படியாக ஜெயலலிதா மறைவுக்கு முன்பும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது பாஜக. ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, அதிமுக கூட்டணி அமைத்து 2019 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தது பாஜக. அதில் இந்தக் கூட்டணி ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி பெற்றது. அதன்பின் 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. அதில், பாஜகவுக்கு 4 இடங்கள் கிடைத்தது. அதன்பின் கூட்டணியில் முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தன.

ஆனாலும், தமிழகத்தில் வெற்றி பெற திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்தால் மட்டும் பத்தாது. திராவிட கட்சியாக மாற வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறது பாஜக. இதனால்தான் பிரச்சார மேடைகளில் அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் பற்றி புகழ்ந்து பேசுகிறது பாஜக. நடந்து வரும் மக்களவைத் தேர்தலிலும் கூட, தமிழகப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அதிமுகவின் முக்கிய தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசினார். அவர்களின் ஆட்சி , திட்டங்கள், தமிழக மக்கள் மீது அவர்கள் கொண்ட அக்கறை என பலவற்றை சுட்டிக்காட்டினார். இதனை எல்லாம் பெரும்பாலும் அதிமுகவுக்கு நல்ல வாக்கு வங்கி இருக்கும் இடங்களில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

காரணம், அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக வலுவிழந்து வருவதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல், பொதுத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் கூட அதிமுக சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்யவில்லை. எனவே, அதிமுகவின் வாக்கு வங்கியை பெறும் முயற்சியில்தான் அதிமுக முக்கியமான தலைவர்கள் பற்றி புகழ்ந்து பேசும் ஸ்டண்ட்டுகளை நிகழ்த்தியது பாஜக. இப்போதும் முன்னாள் தலைவர்கள் மீதுள்ள விசுவாசம் காரணமாகத்தான் பலர் தலைமை மீதான அதிருப்தியைக் கடந்து அதிமுகவுக்கு வாக்களிக்கின்றனர்.

ஆகவே, இந்த முயற்சியின் அடுத்தகட்ட நகர்வாகத்தான், ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் எனக் கூறியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. எதிர்க்கட்சிகள் பாஜக இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதனை தங்களுக்குப் பாசிட்டிவ்வாக மாற்றும் நோக்கத்தில் ஜெயலலிதாவை இந்துத்துவ தலைவர் எனக் கூறியிருக்கிறார் அண்ணாமலை. குறிப்பாக, “இந்துத்துவ அரசியல் செய்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின அந்தக் கொள்கைக்கு தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது . ஆகவே, அதை நிரப்பும் நோக்கில் பாஜக களமாடி வருகிறது” என்கிறார் அண்ணாமலை.

அதுமட்டுமில்லாமல், அதிமுக தற்போது மூன்று அணிகளாகப் பிரிந்துள்ளது. இதனால், அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். பாஜக மற்றும் ஜெயலலிதா கொள்கை ஒன்றுதான் என சொல்லும் அடிப்படையில் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களைத் தங்கள் பக்கம் திருப்ப எடுத்த முயற்சிதான் அண்ணாமலையின் பேச்சு என்னும் கருத்துகள் முன்வைக்கப்படுகிறது. மேலும், அப்போது பேசிய அண்ணாமலை, ‘ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்’ என்பதைக் குறிப்பிட, “மதமாற்ற தடைச் சட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்ததாக” பேசுகிறார். ஆனால், அது திரும்பப் பெறப்பட்டது தொடர்பாக எதையும் அவர் குறிப்பிடவில்லை.

ஆகவே, இது திட்டமிட்டு அதிமுக இடத்தைப் பிடிக்க பாஜக எடுத்திருக்கும் மற்றொரு முயற்சி. இதற்கு தற்போது அதிமுகவினர் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். ஆனால், இப்படி பல வியூகங்களை வகுத்து அதிமுகவை தன்வசப்படுத்த பாஜக முயன்று வருகிறது. அதனை அதிமுக தலைமை எப்படி தடுக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள் > “அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் ஜெயலலிதா” - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம் | “அண்ணாமலைக்கு அறியாமை... ஜெயலலிதாவுக்கு இருந்தது மத நம்பிக்கை அல்ல!” - சசிகலா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x