

தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் சூழல் உருவாகி உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கட்சியை பலப்படுத்த மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப் போவதாவும் அவர் தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை, ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
கட்சியில் மூத்த தலைவர்கள் இருக்கும்போது உங்களை மாநிலத் தலைவராக நியமித்ததற்கு காரணம்?
பாஜகவின் முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது பெருமை அளிக்கிறது. எடுத்த எடுப்பிலேயே நான் மாநிலத் தலைவர் ஆகவில்லை. எனது தந்தை குமரி அனந்தனுக்கு அரசியல் பின்புலம் இருந்தது. ஆனாலும், அவரது பெயரை பயன்ப டுத்தாமல் பாஜகவில் அடிப்படை உறுப்பினராகவே சேர்ந்தேன்.
அப்போது மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.அதன்பிறகு மாநில மருத்துவர் அணி செயலாளர், மண்டல பொறுப் பாளர், மாநில பொதுச் செயலாளர், துணைத் தலைவர், தேசிய செயலாளர் என்று படிப்படி யாக முன்னேறிதான் இப்போது இந்த இடத்துக்கு வந்துள்ளேன். எனது கடுமையான உழைப்புக்கும் களப்பணிக்கும் கிடைத்த அங்கீ காரம் என்றே இதை நினைக்கிறேன்.
உங்கள் தந்தை காங்கிரஸில் இருக்கும்போது நீங்கள் பாஜகவை தேர்வு செய்தது ஏன்?
சுதந்திரம் அடைந்தது முதல் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், நாட்டின் அடிப்படை வசதிகளைக்கூட தீர்த்துவைக்கவில்லை. முக்கிய மாக மருத்துவத்தில் பிற நாடுகளையே நம்பியிருக்கும் சூழல் இருந்தது. இது எனக்கு காங்கிரஸ் மீது கோபத்தை ஏற்படுத்தியது. என் தந்தை தேசியத்தையும் தெய்வீகத்தையும் சொல்லியே என்னை வளர்த்தார். வாஜ்பாயின் அரசியல் எனக்கு பிடித்தது. அவரது அரசியலால் ஈர்க்கப்பட்டேன்.
பாஜக மாநில தலைவரான பிறகு உங்கள் தந்தை ஏதேனும் அறிவுரை சொன்னாரா?
இரண்டு நாட்களாக எனது தொலைபேசியில் நிறைய அழைப்புகள் வந்தபடி உள்ளன. அதனால், எனது தந்தை பேசவில்லை. எனது கணவரை தொடர்புகொண்டு வாழ்த்து சொன்னாராம். எனது தாயார் பெங்களூரில் இருப்பதால் அவரிடமும் இன்னும் பேசவில்லை.
தமிழக பாஜகவுக்கு இருக்கும் முக்கிய சவாலாக எதைக் கருதுகிறீர்கள்?
தமிழக பாஜகவுக்கு நிறைய சவால்கள் இருக்கின்றன. 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை பலம் பொருந்திய கட்சியாக கட்டமைக்க வேண்டியது முக்கியமானதாகும். ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள பலம் பொருந்திய கட்சிகளுக்கு இணையாக பாஜகவை கட்டமைக்க வேண்டும். இதற்காக தொண்டர்களை தயார்படுத்தவும், மக்களின் ஆதரவை பெறவும் நிறைய பணிகளைச் செய்ய வேண்டும்.
கட்சியை பலப்படுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளேன். மாவட்ட அளவில் பாஜக மற்றும் மாற்றுக்கட்சிகளின் நிலையை ஆய்வு செய்து, அதை கட்சியின் உயர்மட்டக் குழுவுக்கு தெரிவிப்பேன். மூத்த தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்பால் கட்சியை பலப்படுத்துவேன்.
மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழலில் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். தமிழகத்தின் பிரச்சினைகளை தீர்க்க எப்படி செயல்படுவீர்கள்?
தமிழக மீனவர் பிரச்சினை தொடர்கதையாகவே உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி இதற்கு தீர்வு காணவில்லை. ஆனால், பாஜக அரசு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தீவிரமாக போராடி வருகிறது. விரைவில் தீர்வு காணப்படும்.
இதுமட்டுமன்றி தமிழகத்தின் அனைத்து முக்கிய பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுப்பேன். மத்திய அரசிடம் தமிழக பிரச்சினைகளை உடனுக்குடன் எடுத்துச் சொல்லி அவற்றை தீர்க்க வழி செய்வேன்.
தமிழக பாஜகவில் நிறைய அணிகள் உள்ளதே, அவற்றை எப்படி சமாளிப்பீர்கள்?
பாஜகவில் மகளிரணி, மருத்துவரணி போன்ற அணிகள் இருக்கிறதே தவிர, கோஷ்டிகள் எதுவும் இல்லை. அனைத்து தலைவர்களையும் அரவணைத்து அவர்களின் முழு ஒத்துழைப்போடு செயல்படுவேன். தமிழக முதல்வர், மாற்றுக்கட்சித் தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் எனக்கு வாழ்த்து கூறியுள்ளனர். எனவே, தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான அரசியல் சூழல் உருவாகி உள்ளது.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
ஏற்கெனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவராக மரகதம் சந்திரசேகர் பதவி வகித்துள்ளார். அவருக்கு பிறகு தேசிய கட்சி ஒன்றின் மாநில தலைவராக பதவி ஏற்கும் பெண் என்ற பெருமையை தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுள்ளார்.