

சென்னை: மாமல்லபுரம் அருகே சுட்டுப் பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி சீர்காழி சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே பிரபல கூலிப்படை கும்பல் தலைவனான சீர்காழி சத்யாவை கடந்த ஜூன் 28-ம் தேதி அன்று போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கோவையில் ஒரு வழக்கில் சத்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் தப்பியோட முயன்றதால், அவரை போலீஸார் சுட்டுப்பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடமிருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்த சீர்காழி சத்யா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ரத்த ஓட்ட பாதிப்பு காரணமாக சீர்காழி சத்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதி்கோரி அவரது தாயார் தமிழரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது புழல் சிறை நிர்வாகம், சத்யாவின் உடல் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையேற்க மறுத்த நீதிபதிகள், பிடிபட்ட சீர்காழி சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதியளித்தும், மருத்துவர்களின் அனுமதியுடன் அவரது தாயார் மட்டும் அவரை சந்திக்கலாம் எனவும் உத்தரவிட்டனர்.