

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே போலீஸாரை பார்த்து தப்பி ஓடிய ரவுடி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சேர்ந்த சத்யா (45), பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் போலீஸாரால் தேடப்படும் நபர் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2005-ம் ஆண்டு ரவுடி டெலிபோன் ரவி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு, மயிலாடுதுறை மாவட்டத்தில் 4 கொலை வழக்குகள், தமிழ்நாடு முழுவதும் 6 கொலை வழக்குகள் என மொத்தம் 32 வழக்குகள் இவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. கொலை முயற்சி போன்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் இவர் ஆஜராகும்போது, 10-க்கும் மேற்பட்ட நபர்களுடன் வருவது வழக்கம்.
மேலும், கடந்த 2010-ம் ஆண்டு அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர் என போலீஸார் வட்டாரங்களில் கூறப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், மாமல்லபுரம் அருகே இலந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ்ஸிஸ் சுதாகர், பிறந்தநாள் விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், சென்னை புறநகர் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த நெடுங்குன்றம் சூர்யா உள்ளிட்ட ரவுடிகள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஏ ப்ளஸ் ரவுடிகளுக்கும், சிறிய ரவுடிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் இருந்தால், அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பவம் நடந்த இடத்தில் தனிப்படை போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில், மாமல்லபுரம் அருகே போலீஸார், தணிக்கையில் ஈடுபட்டபோது, ஏற்கெனவே அவ்வழியாக ஒருகாரில் சீர்காழி சத்யா தனது கூட்டாளிகளுடன் பயணம் செய்தது தெரியவந்தது. தன்னை போலீஸார் பின் தொடர்வதை அறிந்த சத்யா, பழவேலி மலைப் பகுதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளார். அங்கு எதிர்கொண்ட உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமாரை தாக்கிவிட்டு சத்யா தப்பிச் சென்றபோது, போலீஸார் சத்யாவை நோக்கி சுட்டதில் இடது காலில் சத்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதயைடுத்து, சத்யாவை மீட்ட போலீஸார் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக மாமல்லபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.