Published : 02 Jul 2024 05:05 AM
Last Updated : 02 Jul 2024 05:05 AM

சுற்றுலா பயன்பாட்டுக்கு ரூ.3 கோடியில் 5 சொகுசு பேருந்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டுக்காக ரூ.3 கோடி மதிப்பில் 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுற்றுலாத் துறையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக வருகை தரும் வகையில் தமிழக நகரங்களை, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களுடன் இணைக்கும் வகையிலான ரயில் சேவைகளும், தேசிய, மாநில நெடுஞ்சாலை இணைப்பு வசதிகளும் அதிக அளவில் கொண்ட மாநிலமாகவும், பேருந்து உள்ளிட்ட அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது.

தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971-ம் ஆண்டு உருவாக்கினார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா பேருந்து சேவைகள், சுற்றுலா பயணத் திட்டங்கள், ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம்என்ற பெயரிலான உணவு விடுதிகள், படகு குழாம்கள் போன்ற பல்வேறு சேவைகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

சுற்றுலா வளர்ச்சி கழகத்தால் இயக்கப்படும் சுற்றுலா பேருந்துகள் மூலமாக கடந்த 2021 மே 7 முதல் கடந்த மே 31 வரை 3,03,721 பேர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களின் கீழ் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களை மேற்கொள்ளும் வகையில், சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக ரூ.3 கோடி மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பேருந்துகள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட ஒரு பேருந்து என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளின் இயக்கத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகளில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கா.ராமச்சந்திரன், சுற்றுலாத் துறை செயலர் க.மணிவாசன், சுற்றுலா ஆணையர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x