“தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது” - விஜய் அச்சம்

“தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாகிவிட்டது” - விஜய் அச்சம்
Updated on
1 min read

சென்னை: "தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது." என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக சார்பில் நடைபெறும் 2-ம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் தொடங்கியது. விழாவில் பங்கேற்பதற்காக வருகை வந்த நடிகரும், தவெக தலைவருமான விஜய், விழாவில் மாணவர்களுடன் அமர்ந்து உற்சாகத்துடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், "உங்களுக்கு ஒரு சின்ன அறிவுரை. அது நண்பர்கள் மற்றும் நட்பு தொடர்பானது. ஒருகட்டத்துக்கு பிறகு பெற்றோர்களை விட நண்பர்கள் உடன் அதிகமான நேரம் செலவிடும் சூழல் ஏற்படும். அதனால் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். நட்பு என்பது அதுவாக அமைவது, நாம் எப்படி தேர்ந்தெடுக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். அது ஒருவிதத்தில் சரி தான்.

எனினும், உங்களின் நட்பு வட்டாரத்தில் சிலர் தவறான பழக்கங்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றால், முடிந்தால் அவர்களை நல்வழிப்படுத்தப் பாருங்கள். மாறாக நீங்கள் தவறான பழக்க வழக்கங்களில் ஈடுபடாதீர்கள். உங்களுடைய அடையாளத்தை எக்காரணத்தை கொண்டும் இழந்துவிடாதீர்கள்.

இதனை நான் ஏன் இவ்வளவு வலியுறுத்தி சொல்கிறேன் என்றால், சமீபகாலத்தில் தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது. 'போதைப்பொருளை கட்டுக்குள் கொண்டுவருவது அரசின் கடமை. இப்போது ஆளும் அரசு அதலெல்லாம் தவறவிட்டு விட்டார்கள்' என்பதை நான் சொல்லவரவில்லை. அதற்கான மேடையும் இது இல்லை.

அரசாங்கத்தை விட நமது வாழ்க்கையை, பாதுகாப்பை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். உங்களது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு அதனை எப்போதும் வளர்த்துக் கொள்ளுங்கள். say no to drugs என்கிற இந்த உறுதிமொழியை எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேர்வில் மதிப்பெண் எடுக்க முடியாதவர்கள் சோர்ந்து போக வேண்டாம். வெற்றி முடிவு அல்ல, தோல்வி தொடர்கதை அல்ல. இதனை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்." என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in