

கள்ளகுறிச்சி: "மலைவாழ் மக்களை குற்ற சமூகமாக சித்தரிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க மன்னிப்புக்கோர வேண்டும். தவறினால் நீதிமன்றம் மூலம் வழக்குத் தொடருவோம்" என கல்வராயன் மலை மலையாளிகள் பேரவை தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தை முன்னிறுத்தி கல்வராயன் மலையில் வசிப்போரை கொச்சைப்படுத்தும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மூத்த வழக்கறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் மலைவாழ் மக்கள் குறித்து தவறான தகவலை பதிவு செய்ததைக் கண்டித்தும் கல்வராயன் மலை பழங்குடி மலையாளிகள் பாதுகாப்புச் சங்கத்தினர், அச்சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் இன்று கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் 'எங்கள் கல்வராயன் மலையில் இருந்து தான் கள்ளச் சாராயம் தொழில் அதிகமாக நடந்து வருகிறது. அதற்கு திராவிட கட்சிகள் முழு ஆதரவு தருகிறது' என்று ஒரு பொய்யையும் அப்பட்டமாக கூறியுள்ளார். அதற்காக ராமதாஸ் எங்கள் கல்வராயன் மக்கள் இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர்மீது வழக்கு தொடர நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் பழங்குடியின மக்கள் 11 மாவட்டங்களில் வசித்து வருகிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கல்வராயன் மலை மக்கள் இடத்தில் மன்னிப்பு கோரவில்லை என்றால், எங்கள் மலைவாழ் மக்கள் வாழும் கல்வராயன் மலையில் இருந்து உங்கள் மீது வழக்குத் தொடர தயாராக இருக்கிறோம். கல்வராயன் மலைவாழ் மக்களாகிய எங்களை கொச்சைப்படுத்தி, தமிழக மக்களிடம் எங்களை ஒரு குற்ற சமூகமாக மாற்ற முயற்சிக்கும் ராமதாஸையும், அவர்களுடன் கூட்டணி சேருபவர்களையும் இனிவரும் தேர்தல்களிலும் புறக்கணிப்போம்.
இதுபோன்ற அவதூறுகளால் பள்ளி, கல்லூரி செல்லும் எங்கள் குழந்தைகள், வெளியூர் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் அச்சமும் வேதனைப்படுவதோடு கல்வராயன் மலை என கூறவே தயங்குகின்றனர். அப்படி ஊரையும், எங்கள் இடத்தையும் சொன்னால் எங்களை ஏதோ ஒரு தேசத்துரோகி போல பார்க்கிறார்கள். அதனால் தவறான, கற்பனைக்கு எட்டிய கருத்துக்களை கல்வராயன் மலை பற்றி வதந்திகளாக பரப்புவது மூலம் எங்களுடைய குழந்தைகள், மாணவ, மாணவிகளுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக ஆக்கிவிடுவீர்களோ என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆண்டாண்டு காலமாக உழைப்பை நம்பி வாழும் பழங்குடி இனமான நாங்கள் கடந்த சில ஆண்டுகாலமாக தான் சமவெளியில் வசிக்கும் மக்களுக்கு இணையாக வளர்ந்து வருகிறோம். எங்கள் தலைமுறை தான் பள்ளி, கல்லூரி சென்று படிக்க தொடங்கியுள்ளோம். சமூக நீதி, இடஒதுக்கீடு பேசும் நீங்கள் எங்கள் மீது எங்கோ இருந்து கொண்டு உங்கள் விளம்பரங்களுக்காக வன்முறைகளை ஏவாதீர்கள். குற்ற சமூகம் என எங்களை அடையாளப்படுத்தி குளிர் காயாதீர்கள்.
ஆகவே இது போன்ற தவறான கருத்துக்களை எங்கள் கல்வராயன் மலை மக்கள் மீது பழி சுமத்த வேண்டாம் என சமூக ஊடகங்களையும், அதில் பங்கேற்ற கருத்துக் கூறுவோரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்தனர்.