“அரசுக்கு மனமிருந்தால் அவையில் பேச அனுமதிக்கலாம்” - அதிமுக எம்எல்ஏக்கள் பேட்டி

“அரசுக்கு மனமிருந்தால் அவையில் பேச அனுமதிக்கலாம்” - அதிமுக எம்எல்ஏக்கள் பேட்டி
Updated on
1 min read

சென்னை: “அரசுக்கு மனமிருந்தால் கேள்வி நேரத்துக்கு முன்பு மக்கள் பிரச்சினையை பேச அனுமதி வழங்கியிருக்கலாம்” என சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறப்பட்ட பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நத்தம் விஸ்வநாதன்: சட்டப்பேரவையிலும் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளனர். இது கொடுங்கோல் ஆட்சியாகும். விதி என்று சொல்லி மக்கள் பிரச்சினையை முடக்க முடியாது. இதற்கு முன்பெல்லாம் கூட கேள்வி நேரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அரசு அலுவல்கள் மேற்கொண்ட வழக்கம் உண்டு. எனவே கேள்வி நேரத்துக்கு முன்பாக பேச அனுமதிக்க மாட்டோம் என்பதெல்லாம் தவறான செயலாகும். கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க அனுமதி வழங்கலாம். அரசுக்கு மனமிருந்தால் செய்யலாம்.

தளவாய் சுந்தரம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கள்ளச் சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்க சிபிஐ விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் இது குறித்து சட்டப்பேரவையில் பேசுவதற்கு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அனுமதி மறுத்து வருகிறார். இதனால் வெளிநடப்பு செய்தோம். இதை கண்டித்து அமைச்சர் நேரு, சபை முழுவதும் எங்களை தடை செய்ய வேண்டும் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்தார். அதை இன்று ஒரு நாள் மட்டும் தடையாக முதல்வர் திருத்தம் செய்தார்.

ஆனால் இதே முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சபையின் நாகரிகம் அக்கட்சியினருக்கு தெரிந்து இருந்ததா?. முன்னாள் சட்டப்பேரவை தலைவர் பட்டியலினத்தை சார்ந்தவர் என்று தெரிந்து இருந்தும் அவரது சட்டையை கிழித்ததை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு அநாகரிக செயல்களில் திமுக ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் பிரச்சினைக்காக கேள்வி நேரத்துக்கு முன்பாக விவாதிக்க அனைத்து இடங்களிலும் அனுமதி உண்டு. எனவே கள்ளச் சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in