அறந்தாங்கி அருகே தேர் சாய்ந்து ஒருவர் பலி: காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை

அறந்தாங்கி அருகே  தேரின் மேல் பகுதி சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்
அறந்தாங்கி அருகே  தேரின் மேல் பகுதி சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே இன்று (ஜூன் 24) தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். சிலர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் ஜூன் 16-ம் தேதி பூச்சொரிதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து, தினசரி மண்டகப்படி தாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா, பால்குடம் எடுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்று பொங்கல் விழாவையொட்டி அவரவர் வீடுகளில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இந்நிலையில், முக்கியத் திருவிழாவான தேரோட்டத் திருவிழா திங்கள்கிழமை மாலை நடத்த திட்டமிடப்பட்டது.

இத்திருவிழாவையொட்டி சுமார் 15 அடி உயரமுள்ள தேரை அலங்கரிக்கும் இறுதிக்கட்ட பணி இன்று காலையிலிருந்து முழு வீச்சில் நடைபெற்று வந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக தேர் சக்கரத்தின் மேல் பகுதி சாய்ந்து விட்டது. இதில், சிக்கி அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம்(80) என்பவர் உயிரிழந்துவிட்டார். சிலர் காயமடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இன்று மாலை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in