நடிகர் விஜய் பிறந்தநாள்: இபிஎஸ், டிடிவி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவருவம், நடிகருமான விஜய்யின் 50-வது பிறந்த அவரது ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி: தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய் , பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்.
ஜெயக்குமார்: ஆளும் அரசின் விழாக்களுக்கு செல்வது மட்டும் திரைத்துறையின் பணியல்ல. மக்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் குரலை அரசியல் என்று விடுவார்கள். திரைத்துறையினரும் குரல் கொடுத்தால் அரசால் திசை திருப்ப இயலாது!
கள்ளக்குறிச்சி விவகாரம் அரசியல் அல்ல...பாமர மக்கள் மீதான அதிகார தாக்குதல். எல்லாம் கொடுத்த மக்களுக்காக ஏன் குரல் கொடுக்க கூடாது என்பதே எல்லோரின் கேள்வியாகும்! மக்கள் படும் துயரங்களை கண்டு மற்றவர்களை போன்று தூரம் செல்லாமல் குரல் கொடுத்து நேரிலும் சென்று ஆறுதல் தெரிவித்த தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரைப்பணியோடு நின்று விடாமல் மக்கள் பணியிலும் ஈடுபடவுள்ளது வரவேற்கத்தக்கது.
டிடிவி தினகரன்: தமிழ்த் திரையுலக முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய்க்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் பொதுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கும் விஜய் பூரண உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
வானதி: நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் தலைவருமான விஜய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
