நனவாகுமா ஆனைமுத்துவின் சிந்தனைகள்?

நனவாகுமா ஆனைமுத்துவின் சிந்தனைகள்?
Updated on
1 min read

பெரியாரின் கருத்துகளை அறிய விரும்புபவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பேருதவியாய் இருக்கும் பெருந்தொகுப்பு ஆனைமுத்து தொகுத்த ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’. பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளையும் நாத்திகக் கருத்துகளையும் பரப்புவதற்காக அவர் தொடங்கிய ‘திருச்சி சிந்தனையாளர் கழகம்’ பெரியாராலேயே தொடங்கி வைக்கப்பட்டது. ஆனைமுத்து வாழ்ந்த காலத்தில் முன்வைத்த கோரிக்கைகள் பல.

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அத்திருமணத்தை முன்னெடுக்க என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பது ஆனைமுத்து முன்வைக்கும் கேள்வி. குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்கள் குறித்த புள்ளிவிவரங்கள்கூட அரசால் பதிவு செய்யப்படவில்லை. இப்பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஆனைமுத்து (‘சிந்தனையாளன்’, செப். 2010).

மொழிச் சமத்துவத்துக்கு எதிரான அரசமைப்பின் பிரிவுகள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்பதை ஆனைமுத்து தொடர்ந்து வலியுறுத்திவந்தார். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் ஆட்சிமொழியே அந்தந்த மாநில எல்லைக்குள் இருக்கிற ஒன்றிய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் (‘சிந்தனையாளன்’ 01.07.2012). ஆனால், ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பிற மொழியினரும் இந்தியைக் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கும் நிலையே இன்றளவும் தொடர்கிறது.

மாநிலங்களுக்கான வருவாய்ப் பங்கீடு என்பது அவற்றிடையே பாகுபாடு கற்பிப்பதாக உள்ளது. டெல்லியில் ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அமையும்போதும், கூட்டாட்சி என்பது பற்றிப் பேசப்பட்டாலும், இந்தியா உண்மையான கூட்டாட்சி நாடாக இல்லை. தேசிய இனங்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்ற சூழலில், ஆனைமுத்துவின் கூட்டாட்சி குறித்த சிந்தனைகள் விவாதத்துக்கு உள்ளாக்கப்படுவது அவசியம். “இந்தியா என்பது என்றைக்குத் தேசிய இன வழிப்பட்ட சமஉரிமை உடைய சமதர்மக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டரசாக மாறுகிறதோ, அன்றைக்கே உண்மையான சுதந்திர நாள். அந்த நாள்தான் இந்திய ஒன்றியத்திலுள்ள ஒவ்வொரு மொழித் தேச மக்களின் விடுதலை நாள்” (சிந்தனையாளன் 01.11.2020) என்பதே ஆனைமுத்துவின் இறுதி முழக்கம். மாநில சுயாட்சி, மொழி உரிமை குறித்த அவரது சிந்தனைகளை அவருடைய நூற்றாண்டில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in