Published : 20 Jun 2024 08:33 AM
Last Updated : 20 Jun 2024 08:33 AM
சென்னை: வார கடைசி நாட்கள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 1,435 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வரும் ஜூன் 21 (வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி), ஜூன் 22, 23 (சனி, ஞாயிறு) வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 21, 22 தேதிகளில் 1,010 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதேபோல் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 135 பேருந்துகளும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 30 ஏசி பேருந்துகள் ஜூன் 21-ம் தேதி இயக்கப்படுவதோடு, சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஜூன் 21, 22 தேதிகளில் 30 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜூன் 21-ல் திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,435 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT