புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்
புதுக்கோட்டை கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் கைது: இலங்கை கடற்படையால் 6 மாதங்களில் 182 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

Published on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 18) கைது செய்துள்ளனர்.

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 241 விசைப்படகுகளில் திங்கள்கிழமை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த சிபிராஜ் என்பவருக்கு சொந்தமான படகில் சென்ற கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), முரளி (42), சாரதி (28) மற்றும் ராமதாஸ் (52) ஆகியோர் நெடுந்தீவு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடித்துள்ளனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் பார்த்திபன், முரளி, சாரதி, ராமதாஸ் ஆகியோரை கைது செய்ததுடன் அவர்களது படகு, வலைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 6 மாதங்களில் மட்டும் எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 24 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 182 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய மீனவர் சங்கத்தினர், “இரண்டு மாதம் மீன்பிடி தடைகாலம் முடிந்து 15-ம் தேதிதான் கடலுக்குச் சென்றனர். இந்த நிலையில் 4 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருக்கிறது. தற்போது தான் பெருந்தொகையை செலவு செய்து படகுகளை சீரமைத்து கடலுக்குச் சென்றார்கள்.

இந்த நிலையில், படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளதால் அதையும் மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மீனவர்களின் ஒட்டுமொத்த குடும்ப வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர எப்போதுதான் விடிவு பிறக்குமோ தெரியவில்லை” என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in