மீன்பிடி தடை நாளையுடன் நிறைவடைகிறது - கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்

மீன்பிடி தடைகாலம் நிறைவடைய உள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் மூலம், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கத் தயாராகும் மீனவர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்
மீன்பிடி தடைகாலம் நிறைவடைய உள்ள நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் மூலம், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கத் தயாராகும் மீனவர்கள். படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
1 min read

சென்னை: கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்.15-ம் தேதி தொடங்கி, நாளையுடன் (14-ம் தேதி) நிறைவடைகிறது.

இந்தத் தடை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டன.

சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. மீன்பிடி தடைக் காலத்தின் போது மீன்பிடித் தொழில் முற்றிலுமாக தடைப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, மீனவர் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கியது.

இந்த தடைக் காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களைச் சீரமைத்தனர். தடைக் காலம் நாளையுடன் முடிவடைவதால், நாளை நள்ளிரவே கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகளில் ஐஸ் கட்டிகள், டீசல், உணவுப் பொருட்கள், குடிநீர், மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், சிலர் தங்களது படகுகளுக்கு வர்ணம் தீட்டுதல் மற்றும் கடைசி நேர மராமத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடித் தடை காரணமாக கடந்த 2 மாதங்களாக மீன்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது, மீனவர்கள் கடலுக்குச் செல்வதை அடுத்து மீன்களின் வரத்து அதிகரிக்கும். இதனால், அடுத்த வாரம் முதல் மீன்களின் விலை குறையத் தொடங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in