Last Updated : 06 Jun, 2024 05:39 PM

 

Published : 06 Jun 2024 05:39 PM
Last Updated : 06 Jun 2024 05:39 PM

''ஓபிஎஸ், சசிகலாவின் விஷமப் பிரசாரங்கள் எடுபடாது'' - அதிமுக துணைப் பொதுச் செயலர் கே.பி.முனுசாமி

கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

கிருஷ்ணகிரி: “அரசியல் செய்யும் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரின் விஷமப் பிரசாரங்கள் எடுபடாது” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, ''ஓபிஎஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் எனவும், ஒன்றிணைவோம் வா எனவும் கூறியுள்ளார். அவர் அதிமுகவையும் தொண்டர்களையும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். அதிமுகவுக்கு பல்வேறு சோதனைகள் வந்தபோது, மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓபிஎஸ்.

அதிமுக தலைமை அலுவலகத்தில் குண்டர்களை வைத்து அடித்து, உடைத்து ஆவணங்களை திருடியவர். சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து தற்போது போட்டியிட்டவர். இவருக்கு அதிமுக பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் இல்லை. தமிழக, பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். அவரை நல்லவர் எனக்கூறி கை கோத்துள்ளார். அதிமுகவின் உண்மையான விசுவாசி யாரும் அவர் பக்கத்தில் கூட அமர மாட்டார்கள்.

எனவே, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு ஓபிஎஸ்ஸுக்கு அருகதை இல்லை. சசிகலா, ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்ய வந்தவர். அவருடன், 36 ஆண்டுகள் பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர். அவர், தற்போது அனைவரும் ஒற்றுமையாக வாருங்கள் என அழைத்து அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை விடுத்து, 24 மணி நேரமாகியும் யார் அவரிடம் சென்றார்கள் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன்.

அதிமுகவில் குழப்பம் விளைவிக்க வேண்டுமென ஒரு சிலர் தொடர்ந்து முயல்கின்றனர். ஆனால், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். கட்டுகோப்பாக உள்ள அதிமுகவில் சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் ஓபிஎஸ், சசிகலா ஆகியோரின் விஷமப் பிரசாரங்கள் எடுபடாது. தேசிய கட்சிகளோடு கூட்டணி வைத்தால், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

கடந்த, 1998-ம் ஆண்டு, தென்னிந்தியாவிலேயே பாஜக இல்லாத போது ஜெயலலிதா, பாஜகவை அறிமுகம் செய்து கூட்டணியில் சேர்த்து, அப்போது வாஜ்பாயை பிரதமராக்கினார். ஆனால், அவர்கள் தமிழக உரிமையான காவிரி விவகாரத்தை கண்டுகொள்ளாததால், 13 மாதத்தில் கூட்டணியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அந்த உரிமையைப் பெற்றுத் தந்தார். அதனால் தான் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது.

திமுக, பல கட்சிகளை கூட்டணியில் சேர்த்து போட்டியிட்டு, பணபலம், அதிகாரபலம் உள்ளிடவற்றை வைத்து வென்றுள்ளது. அதிமுகவோ கூட்டணி பலமின்றியும் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அண்ணாமலை, தமிழக பாஜக நேர்மையாக தேர்தலை எதிர்கொண்டதாக பொய் கூறுகிறார். அவர்கள் தொகுதியில் விசாரித்தால் எவ்வளவு பணம் செலவு செய்தார்கள் என்பது தெரியும். இதுபோன்ற பேச்சுகள் எல்லாம் புஸ்வாணம் ஆகி, வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக எப்படி வெல்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x