தமிழகத்தில் வெப்ப தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமைக் கொள்கை உருவாக்கம்: சுப்ரியா சாஹு

பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம்
Updated on
1 min read

சென்னை: வெப்ப அலையின் தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமைக் கொள்கை, பசுமை தமிழ்நாடு இயக்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் கிளைமேட் ட்ரெண்ட் அமைப்பு சார்பில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப அலை மற்றும் பருவ மழை முறையில் மாற்றம் தொடர்பான தேசிய கருத்தரங்கு சென்னை ராயப்பேட்டையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியாசாஹூ இணைய வழியில் பங்கேற்று பேசியதாவது: வெப்ப அலையை அறிந்து கொள்வது என்பது ராக்கெட் அறிவியல் இல்லை. இயல்பாகவே அதை மக்களால் உணர முடியும். வெப்ப அலையின் தாக்கம் தமிழகத்துக்கு சவாலாகவே உள்ளது.

வெப்ப அலையின் தாக்கத்தை மட்டுப்படுத்த, அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீட்டின் மேல் தளத்தில் சோதனை முறையில் வெள்ளை சிலிக்கா பெயிண்ட் பூசி பார்த்தோம். அதன் மூலம் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருந்தது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மீள்வது தொடர்பாக குடியிருப்பு நல சங்கங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓர் இணையதளம் தொடங்க இருக்கிறோம்.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் எல்லா தகவலும் ஒரே தளத்தில் கிடைக்கும். வெப்ப அலையின் தாக்கத்தை மட்டுப்படுத்த நகர்ப்புற பசுமைக் கொள்கை, பசுமை தமிழ்நாடு இயக்ககத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணூர் பகுதியில் 60 ஹெக்டேர் பரப்பில் சதுப்பு நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன், தமிழ்நாடு திட்ட ஆணைய உறுப்பினர் செயலர் சுதா ராமன், தமிழ்நாடு பருவநிலை மாற்ற இயக்கத்தின் இயக்குநர் ராகுல் நாத், கிளைமேட் ட்ரெண்ட்ஸ் அமைப்பின் நிறுவன இயக்குநர் ஆர்த்தி கோஷ்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in