

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் உபரி நீரை விடுவிக்குமாறு இமாச்சல் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமார் 137 கியூசெக்ஸ் நீரை கூடுதலாக இமாச்சல் விடுவிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பு அது குறித்த தகவலை ஹரியாணா மாநில அரசிடம் இமாச்சல் தெரிவிக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டியுள்ளது. அதனை வாஜிராபாத் அணை வழியாக வெளியேற்றுவதற்கான வசதிகளை மேற்கொள்ள ஹரியாணா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
அப்படி பெறுகின்ற நீரை டெல்லி அரசு வீணடிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கடந்த வாரம் டெல்லியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க உத்தரப் பிரதேசம், இமாச்சல் மற்றும் ஹரியாணா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டுமென கோரி உச்ச நீதிமன்றத்தில் டெல்லியை ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி அரசு மனு செய்தது. அதன்பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவை தற்போது பிறப்பித்துள்ளது.
பாஜக தலைமை தங்களது உ.பி மற்றும் ஹரியாணா மாநில அரசிடம் பேசி நீர் வழங்க வேண்டுமென டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை டெல்லி அரசு முன்னெடுத்தது. ஆனாலும் அது பெரிய அளவில் பலன் தரவில்லை என டெல்லி வாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.