Last Updated : 04 Jun, 2024 02:17 PM

 

Published : 04 Jun 2024 02:17 PM
Last Updated : 04 Jun 2024 02:17 PM

“தன்னை கடவுளாக காட்டிக் கொண்டவருக்கு மரண அடி” - புதுச்சேரி காங். வேட்பாளர் வைத்திலிங்கம்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தலில் பாஜக சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மொத்தம் 78.90 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தமுள்ள 10,23,699 வாக்காளர்களில் 8 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் வாக்களித்தனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி, மோதிலால்நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மண்ணாடிப்பட்டு, காமராஜ் நகர், ஏனாம் உள்ளிட்ட 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதேபோல் காரைக்கால், மாஹே, ஏனாம் தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 1,55,554 வாக்குகளும், பாஜக வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் 1,23,055 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 14,493 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் 9475 வாக்குகளும் பெற்றனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தைவிட 32,870 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். தொடர்ந்து அடுத்த கட்டமாக 10 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மக்களவை தொகுதியில் இதுவைரை 12 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. இன்னும் 18 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும். நிச்சயம் அதில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றேன். இதைவைத்து பார்க்கும் போது புதுச்சேரியில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

அகில இந்திய அளவிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. பெரிய வளர்ச்சியும் கண்டுள்ளோம். ஆட்சியமைக்க நெருங்கி வரும் நிலை உள்ளது. பாஜக என்று சொல்லக்கூடிய மாயை, தோற்கடிக்க முடியாது என்றும், தன்னை கடவுள் என்றும் காட்டிக்கொண்ட பிரதமருக்கு எல்லாம் மரண அடி தந்திருக்கிறார்கள்.

என்னுடைய வெற்றியை நிச்சயம் இண்டியா கூட்டணி தலைவர்களுக்குத்தான் தர வேண்டும். இண்டியா கூட்டணியில் உள்ள அனைவருக்கும் நான் இந்த வெற்றியை சமர்ப்பிக்கின்றேன். ஏனாமில் சந்தர்ப்பவாத அரசியல் அதிகம்.

ஆகவே அந்த சந்தர்பவாத அரசியலை இங்கு பேசுவது சரியாக இருக்கிறது. நிச்சயம் பாஜகவின் ஆட்சி அமையும் என்று யாரும் சொல்லவில்லை. அந்த கூட்டணியில் இருப்பவர்கள் அவருடன் இருப்பார்களா என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x