

திருநெல்வேலி: நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பை சட்டமன்ற தொகுதி வாக்குப் பெட்டிகள் உள்ள பகுதிக்கு (ஸ்டிராங் ரூம்) முகவர்கள் செல்லும் வழியில் உள்ள வாசலின் பூட்டுக்கான சாவி தொலைந்ததால் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள், நெல்லை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு காலை முதலே, வாக்குச்சாவடி அலுவலர்கள், முகவர்கள் வரத் தொடங்கினர். இவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குப்பிறகு, வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பெட்டிகள் உள்ள பகுதிக்கு முகவர்கள் செல்லும் வழியில் உள்ள வாசலின் பூட்டுக்கான சாவி தொலைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினா்.
இதற்கு முகவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பூட்டை அதிகாரிகள் உடைத்தனர். பின்னர், அந்த அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள் தேர்தல் ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பூட்டு உடைக்கப்பட்ட சம்பவத்தால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.