

கோவை: இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் இன்று ஆர்பாட்டம் நடந்தது.
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமை வகித்தார். பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடப்பதாக, இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். "காசாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்தாண்டு அக்டோபர் முதல் இனப் படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கையால் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 26-ம் தேதி எல்லை நகரமான ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். பாலஸ்தீன பகுதிகளில் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை ஐநா சபை மூலம் உருவாக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.