உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு கோரி பாபுராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் போலீஸில் புகார்

பாபுராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் கணேசன்
பாபுராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் கணேசன்
Updated on
1 min read

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பாபுராஜபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மகேஸ்வரி கணேசன். இவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கோரி தனக்கு பாதுகாப்பு வழங்கிட வலியுறுத்தி சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மகேஸ்வரி கணேசன், அளித்துள்ள புகார் மனுவில், “பாபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தைத் தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார். இது தொடர்பாக நில அளவையரைக் கொண்டு, அண்மையில் அந்த இடம் அளவீடு செய்யப்பட்டது. அதில், அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இடம் மீட்கப்பட்டது. தொடர்ந்து, அந்த இடத்தைச் சுற்றி கம்பி வேலிகள் மற்றும் கற்கள் இறக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, எனது கணவரை தொலைபேசி மூலம் சில மர்ம நபர்கள் மிரட்டியது தொடர்பாக கடந்த மே 25-ம் தேதி சுவாமிமலை காவல் நிலையத்தில் புகாரளித்தோம். இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீஸார் கூறியதால், நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டோம். இந்நிலையில் இன்று, பிரச்சினைக்குரிய அந்த இடத்துக்கு காரில் வந்து இறக்கிய 4 பேர், எனது கணவரை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

உடனடியாக, எனது கணவர் கணேசன் போலீஸாருக்கு தகவல் அளித்ததின் பேரில், போலீஸார் அங்கு வந்தனர்.அப்போது, அந்த 4 பேரையும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்த போலீஸார், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து எங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சுவாமிமலை போலீஸார் எனக்கும் எனது கணவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்” என அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in