“கோவை சிறையில் என் உயிருக்கு அச்சுறுத்தல்” - நீதிபதியிடம் சவுக்கு சங்கர் முறையீடு

சவுக்கு சங்கரை மதுரை நீதிமன்றத்தில் கஞ்சா வழக்கில் போலீஸார் ஆஜர்படுத்தினர்   | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சவுக்கு சங்கரை மதுரை நீதிமன்றத்தில் கஞ்சா வழக்கில் போலீஸார் ஆஜர்படுத்தினர் | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
2 min read

மதுரை: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற வளாகத்தில் சங்கருக்கு எதிராக பெண்கள் துடைப்பத்துடன் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சவுக்கு சங்கர். காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவரை கோவை போலீஸார் மே 5-ம் தேதி கைது செய்தனர். தேனியில் சவுக்கு சங்கர் காரில் சோதனையிட்ட பழனிசெட்டிபட்டி போலீஸார் காரில் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சங்கருடன் தேனி விடுதியில் தங்கியிருந்த ராஜரத்தினம், அவரது ஓட்டுனர் ராம்பிரபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கரையும் பழனிசெட்டிபட்டி போலீஸார் கைது செய்தனர். கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை போலீஸார் மதுரை போதை பொருள் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று ஆஜர்படுத்தினர்.

அப்போது சங்கர் வலது கையில் கட்டுப்போட்டிருந்தார். அவரிடம் நீதிபதி வழக்கு குறித்து என்ன சொல்கிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு சங்கர், “இது பொய் வழக்கு. கோவை சிறையில் என்னை போலீஸார் கடுமையாக தாக்கினர். இதில் எனக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும்” என்றார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கோரிக்கை தொடர்பாக மனு அளித்தால் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும், எனக் கூறி, சங்கரை மே 22 வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

துடைப்பத்துடன் போராட்டம்: சவுக்கு சங்கருக்கு எதிராக போராட்டம் நடத்த துடைப்பத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை நீதிமன்ற பிரதான வாயிலில் கூடினர். இதையடுத்து உதவி ஆணையர்கள் காமாட்சி, ராஜேஸ்வரன் தலைமையில் போலீஸார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சவுக்கு சங்கர் போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்ட போது பிரதான வாயிலில் வேனை சூழ்ந்து கொண்டு பெண்கள் துடைப்பத்தை காட்டி சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போலீஸ் வேன் மீது துடைப்பத்தை தூக்கி வீசினர். இப்போராட்டத்தால் மதுரை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in