உலக பட்டினி தினம் | 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு: விஜய் கட்சி அறிவிப்பு

உலக பட்டினி தினம் | 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு உணவு: விஜய் கட்சி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் மே 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனை தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டனர். தற்போது வரை உறுப்பினர் சேர்க்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது. தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட கட்சி சார்ந்த பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வந்தார்.

மேலும், கடந்த ஆண்டை போலவே நடப்பு ஆண்டிலும் பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு அடுத்த மாதம் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகளை வழங்க இருக்கிறார். இந்நிலையில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உலகப் பட்டினி தினமான மே 28-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்துச் சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

மாவட்ட அணி, நகரம், ஒன்றியம், கிளை மற்றும் சட்டப்பேரவை தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றிப் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதேபோல், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் இயக்க நிர்வாகிகள் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவு வழங்கினர். தற்போது, கட்சி தொடங்கிய பிறகு, முதன்முதலாக கட்சி சார்பில் மக்களுக்கு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மக்களுக்கு உணவு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in