Last Updated : 24 May, 2024 08:52 PM

 

Published : 24 May 2024 08:52 PM
Last Updated : 24 May 2024 08:52 PM

கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு: காவல் துறை, மின்வாரியம் விசாரணை

மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த பூங்கா வளாகம்.

கோவை: கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பூங்காவில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து காவல் துறையினர், மின் வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி அருகே துடியலூர் சாலையில் ராணுவ வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ராமன் விகார் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இக்குடியிருப்பில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாட்டின் முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், பணிபுரிபவர்கள் இங்கு வீடுகளை வாங்கி வசித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டி மகன் ஜியான்ஸ் ரெட்டி (4), நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த பாலசுந்தர் மகள் வியோமா பிரியா (8) ஆகிய குழந்தைகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வியாழக்கிழமை (மே 23) மாலை 6.30 மணியளவில், அவ்வாளகத்தில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்தனர்.

அந்நேரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது அங்கு உள்ள சறுக்கு விளையாட்டில் சிறுவன் ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகிய 2 பேர் விளையாடிக் கொண்டிருந்த போது, இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. அவர்களது பெற்றோர் அங்கு வந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்து கிடந்த 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, குழந்தைகள் ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகியோர் முன்னரே உயிரிழந்தது தெரிந்தது.

இப்பூங்கா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின் விளக்கு அமைக்க, தரைக்கு அடியில் மின் வயர்கள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த மின் வயர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே சரிவர பராமரிக்காததால் சேதப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது. மின்வயரை பராமரித்திருந்தால் 2 குழந்தைகளின் உயிர்கள் தப்பித்து இருக்கும் எனத்தெரிகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை பாலசுந்தர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் (சட்டப்பிரிவு 174) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகாரிகள் விசாரணை தீவிரம் : மேலும், இச்சம்பவம் குறித்து அப்பூங்காவில் மின்வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர். மேலும், துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான போலீஸாரும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். சரிவர பராமரிக்காத மின்வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது தான் காரணமா? என இருதரப்பினரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகியோரின் உடல்கள் இன்று (மே 24) கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு அறிவுரை: கோவை மாநகர காவல் துறையினர் இன்று (மே 24) வெளியிட்ட செய்திக் குறிப்பு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களது குடியிருப்புகளில் உள்ள மின்மாற்றிகள், பூங்காக்கள், பிற கட்டிடங்களில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா, இணைக்கப்பட்டுள்ளதா, வயர்கள் சேதமின்றி உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படுவதை தடுக்க எலக்ட்ரீசியன்கள், மின்வாரிய ஊழியர்களை கொண்டு அவ்வப்போது பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதில் அலட்சியம் காட்டக்கூடாது.

ஈரக் கைகளால் மின் இணைப்புகளை தொடக்கூடாது. இடி, மின்னல், மழை நேரங்களில் மின்சாதன பொருட்களை தேவையில்லாமல் உபயோகப்படுத்த வேண்டாம். மின்சாதன பொருட்களை உபயோகித்த பின்னர், மின் இணைப்பிலிருந்து துண்டித்து வையுங்கள். ஈரப்பதம் உள்ள சுவர்களில் இருக்கும் பிளக் பாயிண்ட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் மின்பழுது தொடர்பான பிரச்சினை வந்தால், அதை தன்னிச்சையாக சரி செய்யக்கூடாது.

சுவர்களிலும், மேற்கூரைகளிலும், ஈரப்பதம் இருந்தாலோ அல்லது மழை நீர்க்கசிவு இருந்தாலோ அதை உடனடியாக சரி செய்யுங்கள். வெளியிடங்களுக்கு செல்லும் போது, ஈரப்பதம் உள்ள சுவர்கள், மின்கம்பங்கள் ஆகியவற்றை தொடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள், குழந்தைகள் அதிகம் கூடும் பூங்கா போன்ற இடங்களில் உள்ள மின்கம்பங்கள், மின் இணைப்புகள் போன்றவற்றின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

சாலையோரங்களில் மின்சார பராமரிப்புப் பணிகளோ, சாலை பராமரிப்புப் பணிகளோ நடைபெற்றிருந்தால் அப்பகுதிகளில் சில நேரங்களில் மின்கசிவு ஏற்படும் வாய்ப்பு இருக்கும். அத்தகைய பகுதிக்கு செல்லும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்தோலோ, மரம் முறிந்து விழும் நிலையில் இருந்தாலோ, கிளைகள் விழும் நிலையிலிருந்தாலோ அதுகுறித்து மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம்.

மழை காலத்தில் பழுதான கட்டிடம், மரத்தின் கீழ் ஒதுங்க வேண்டாம். வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும். மழைக்காலங்களில் வெளியில் செல்லும் பொழுது மின்சார தாக்குதலை தவிர்க்க ரப்பர் காலனிகள், ரப்பர் பூட்ஸ்களை உபயோகிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x