

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறையில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால், மேட்டூர் அணையில் 50 அடிக்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பு உள்ளதால், நடப்பாண்டு குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது.இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், தற்போதுகுறுவை சாகுபடிக்காக வயலை உழவு செய்தல், இயற்கை உரமிடுதல், நாற்றங்கால் தயாரித்தல், வரப்புகளைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தற்போது ஓரளவுக்கு மழை பெய்து வருவதால், மேட்டூர்அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே பம்புசெட் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடியை தொடங்கியுள்ள விவசாயிகள், தற்போது ஆற்றுப் பாசனம் மூலம்நடைபெறும் குறுவை சாகுபடிப்பணிகளையும் தொடங்கியுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறும்போது, "நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் உள்ளது. அதற்கு ஏற்றாற்போல காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் நல்ல மழை பெய்து வருகிறது" என்றார்.
வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில்குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பம்புசெட்மூலம் தற்போது 30 சதவீத சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன.
விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம் உள்ளிட்டவை, வேளாண்மை துறை மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால், ஆற்றுப் பாசனம் மூலம்பயன்பெறும் விவசாயிகளும் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.