நெல்லை ஜெயக்குமார் தனசிங் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில்  சிபிசிஐடி போலீஸார் விசாரணை
நெல்லை ஜெயக்குமார் தனசிங் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை

நெல்லை காங். தலைவர் மர்ம மரண வழக்கில் விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி

Published on

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங் (60) மர்மமாக உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைசுத்துப்புதூரை சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். இவர் மர்மமாக உயிரிழந்த நிலையில் அதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் உலகராணி நியமிக்கப்பட்டார். அவரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள், பிரேத பரிசோதனை அறிக்கை, தடயவியல் சோதனை அறிக்கைகள் உள்ளிட்டவற்றை வள்ளியூர் டிஎஸ்பி யோகேஸ்குமார் வியாழக்கிழமை வழங்கினார்.

இதுவரை யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது? என்பது குறித்தும் விளக்கினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் உலகராணி தலைமையிலான 10 பேர் கொண்ட சிபிசிஐடி போலீஸ் குழுவினர் கரைசுத்துப்புதூரில் ஜெயக்குமார் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தை இன்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், ஜெயக்குமாரின் வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். சிபிசிஐடி விசாரணை உடனே தொடங்கியுள்ள நிலையில் ஜெயக்குமாரின் மர்ம மரணத்தில் விலகாத முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in