‘சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால் தமிழகத்தில் 10,000 ஏக்கர் விளைநிலம் பாழாகும்’

ஆர்.வேலுசாமி.
ஆர்.வேலுசாமி.
Updated on
1 min read

நாமக்கல்: சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டினால், தமிழகத்தில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாயப் பரப்பளவு குறையும். குடிநீர் தட்டுப்பாடு அபாயம் உருவாகும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர்.வேலுசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை எவ்வித அனுமதியும் இன்றி கேரள அரசு தொடங்கியுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்து, அமராவதி அணையால் பாசன வசதி பெறும் 54,637 ஏக்கர் நிலங்களும் மற்றும் விவசாயிகளுடைய வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும்.

குறிப்பாக, திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள், பாதிக்கப்படுவர். இதனால், விவசாயம் செய்துவரும் பரப்பளவில் 10,000 ஏக்கர் குறையும் அபாயம் ஏற்படும். மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகும்.

எனவே, அமராவதி அணை பாசன விவசாயிகள் நலன் கருதி தமிழக அரசு அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள அரசு தொடங்கியுள்ள பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in