Published : 23 May 2024 02:38 PM
Last Updated : 23 May 2024 02:38 PM

சிலந்தி ஆறு தடுப்பணை | உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தனி வழக்குத் தொடர இந்திய கம்யூ. வலியுறுத்தல்

கேரளா மாநிலத்துக்குட்பட்ட சிலந்தி ஆற்றின் குறுக்கே வேகமாக நடை பெற்றுவரும் அணை கட்டுமானப் பணி.

சென்னை: “சிலந்தி ஆறு தடுப்ணை விவகாரத்தை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. கட்டுமான பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் வழக்கில் தமிழக அரசும் இணைந்து தடுப்பணை கட்டுமானத்தை தடுத்திட வேண்டும். இல்லையேல் உச்ச நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்து தடுத்திட வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “குடிநீர் உள்ளிட்ட வாழ்க்கை தேவைக்கும், உணவு உற்பத்திக்கும், தொழிலுக்கும் அடிப்படையான நீராதாரத்தை அண்டை மாநிலங்களை நம்பியே தமிழகம் உள்ளது. காவிரி, முல்லைப்பெரியாறு, தென்பெண்ணை, பாலாறு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நீர்பங்கீட்டு பிரச்சினைகள் தமிழகத்துக்கும், சம்பந்தப்பட்ட நதிகள் உற்பத்தியாகும் மாநிலங்களுக்கும் இடையே பல்லாண்டுகளாய் நீடித்து வருகிறது.

தமிழகத்துக்குரிய சட்டரீதியான நீர் பங்கீட்டை கூட தொடர்ந்து தடுத்திடும் நடவடிக்கைகளை, இந்த ஆறுகள் உற்பத்தியாகும் பகுதிகளை வைத்துள்ள மாநிலங்கள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த பிரச்சினைகள் குறித்தான வழக்குகளும் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் தான் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே, வட்டவடா என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியை துரித கதியில் நிறைவேற்றி வருகிறது.

முதல் கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம், 120 அடி நீளத்தில் இந்த தடுப்பணை அமைக்கும் பணி வெகு வேகமாக நடந்து வருகிறது. இப்பணி முடிவுற்றால், கரூர், திருப்பூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் பெறுவதற்கு சாத்தியமாகாது . தமிழக மாவட்டங்களில் ஓடிவரும் அமராவதி ஆறு நீர்வழி பயன்பாடு தடைபடும்.

1958 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அமராவதி அணை மூலமாக சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆற்றுப்படுகையில் 110 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு பல லட்சம் மக்களின் குடிநீர் தேவை பயன்பாட்டை இது பூர்த்தி செய்து வருகிறது. அமராவதி ஆற்றில் இருந்து காவிரிக்கு கிடைத்து வரும் நீரையும் கணக்கில் கொண்டே மற்ற தமிழகத்துக்கு கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீர் பகிர்வை காவிரி நடுவர் மன்றம் தன் இறுதி தீர்ப்பில் வெளியிட்டுள்ளது.

காவேரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமலேயே சிலந்தி அணை கட்டுமானம் நடந்து வருகிறது. அண்டை நட்பு மாநிலமான தமிழகத்தின் உறவு பாதிக்கும் என்பதை கேரளா மாநில அரசு கவனத்தில் கொள்ளாமல் இந்த தடுப்பணையை கட்டுவது என்பது வஞ்சக செயலாகும். குடிநீருக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக கேரளா அரசு கூறினாலும், இந்த அணையின் அருகே அமைந்துள்ள கார்ப்பரேட் நிறுவன நீர் சுத்திகரிப்பு ஆலைக்காகவே இந்த படுக்கை அணை கட்டப்படுவதாக செய்தி வருகிறது.

இந்த தடுப்பணை கட்டுமானத்தால் திருப்பூர், கரூர் மற்றும் காவிரி நீர் பயன்பாடு மாவட்டங்களின் மக்களிடம் அச்சம், பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இச்சூழலில் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி தானாக முன்வந்து இதை விசாரணைக்கு உடனடியாக எடுத்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது. எனவே தமிழக அரசு உடன் கேரள அரசுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்திட வேண்டும். கட்டுமான பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் வழக்கில் தமிழக அரசும் இணைந்து சிலந்தி ஆறு தடுப்பணை கட்டுமானத்தை தடுத்திட வேண்டும்.

இல்லையேல் உச்சநீதிமன்றத்தில் தனி வழக்கு தொடுத்து இதை தடுத்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் இடுக்கி நீர் பேக்கேஜ் திட்டத்தில் 8 இடங்களில் அங்கு தடுப்பணை கள் கட்ட கேரளா அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வருகிறது. ஆகவே தொடக்கத்திலேயே இவைகளை தடுத்து நிறுத்திட வேண்டிய அவசியம் உள்ளது என்பதை உணர்ந்து உரிய தொடர் மேல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்திட விரும்புகிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x