

சென்னை: குவைத் கடலோர காவல்படை யால் கடந்தாண்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய வெளியுறவுத் துறை செயலருக்கு தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ்மீனா நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குவைத்தில் கைதான ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை மீட்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி செய்தி வெளியாகியுள்ளது. கடந்தாண்டு டிச.5-ம் தேதி குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய தூதரகவழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்.9-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதும், இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதால், அவர்களை விடுதலை செய்ய உரிய தூதரக நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய வெளியுறவுத் துறை செயலருக்கு இன்று மீண்டும் நினைவூட்டல் கடிதம் எழுதியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.