சென்னையில் விதிகளை மீறி நம்பர் பிளேட்டில் ‘போலீஸ்’ ஸ்டிக்கர் - அபராதம் விதித்து நடவடிக்கை

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந் இருசக்கர வாகனத்தில் இருந்து ஸ்டிக்கரை அகற்றி அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந் இருசக்கர வாகனத்தில் இருந்து ஸ்டிக்கரை அகற்றி அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார்.
Updated on
1 min read

சென்னை: சென்னையில் விதிமுறைகளை மீறி போலீஸாரின் வாகனங்களில் ‘போலீஸ்’ என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை போக்குவரத்து போலீஸார் அகற்றியதோடு, அபராதமும் விதித்தனர்.

பலர் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட், தலைமைச் செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனை மற்றும் தணிக்கையின்போது அவர்களில் பலர் போலியாக ஸ்டிக்கர் ஒட்டியது தெரியவந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஒப்புதல்படி, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த மாதம் 27-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில், ‘தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார். இதற்கிடையே, ஊடகம், டாக்டர், வழக்கறிஞர் என தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் மட்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி அளித்தனர்.

ஆனால், நம்பர் பிளேட்டில் எக்காரணம் கொண்டும் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என கண்டிப்பு காட்டினர். இதை மீறியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதோடு, தடையை மீறி ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் போக்குவரத்து போலீஸாரால் அகற்றப்பட்டு வருகின்றன. அதன்படி வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸாரின் வாகனங்கள் திங்கள்கிழமை மதியம் போக்குவரத்து போலீஸாரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

போக்குவரத்து ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையிலான போலீஸார் காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட போலீஸாரின் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை அடுத்தடுத்து ஆய்வு செய்தனர். இதில் இருசக்கர வாகன நம்பர் பிளேட்டுகளில் ‘போலீஸ்’ என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அகற்றினர். இந்த வாகனத்துக்கு சொந்தமான போலீஸாருக்கு தலா ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in