Published : 30 Apr 2024 06:08 AM
Last Updated : 30 Apr 2024 06:08 AM

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கும் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் வேண்டுகோள்

சென்னை: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மருத்துவர்கள், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர், மருத்துவர் என அங்கீகாரமற்ற வகையில் ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 198 மற்றும் மத்திய மோட்டார் வாகன சட்டம் விதி 50-ன் கீழ் வரும் மே 2-ம் தேதி முதல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து போலீஸார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளன. வாகனங்களில் ‘டாக்டர்’ ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுமதி அளிக்க கோரி, சென்னை காவல் ஆணையருக்கு ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கமாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: மருத்துவர்கள் பணி மனித உயிரை காப்பாற்றும் ஒரு இன்றியமையாத பணி ஆகும். அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரிப்பதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.

இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சந்தேகப்படும் மருத்துவர்களை ஐடி கார்டை காட்ட சொல்லலாம். அனைத்து மருத்துவர்களையும் டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்பது மருத்துவர்களை அவமரியாதை செய்வதாகவும், உயிர் காக்கும் உன்னத பணியை தடுப்பதாகவும், மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

அதனால், அந்த சுற்றறிக்கையை உடனடியாக திருத்தம் செய்து, டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விலக்களித்து, புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் எஸ்.அறிவழகன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அதில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர் என்ற வாகன பதிவு எண் கொண்ட ஹோலோகிராம் ஸ்டிக்கரை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் விநியோகம் செய்கிறது.

உயர் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற வளாகங்களுக்குள் வழக்கறிஞர்கள் தங்கு தடையின்றி வந்து செல்லவும், வழக்கறிஞர்கள் என்ற போர்வையில் வெளிநபர்கள் தவறாக சட்டவிரோதமாக செயல்படுவதை தடுக்கும் வகையிலும், பதிவு செய்துள்ள வழக்கறிஞர்களை வேறுபடுத்திக் காட்டவுமே அங்கீகாரம் பெற்ற வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் இந்த ஸ்டிக்கர்களை வழங்குகிறது.

மத்திய மோட்டார் வாகன சட்ட விதி 50-ன் படி குறைபாடு உடைய நம்பர் பிளேட் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். கண்ணாடிகளில் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அந்த விதிகள் தடையாக இல்லை.

எனவே பார் கவுன்சிலில் பதிவு செய்யப்படும் வழக்கறிஞர்கள் தங்களது வாகனங்களில் பார் கவுன்சில் வழங்கும் ஸ்டிக்கரை பயன்படுத்திக்கொள்ள எந்த தடையும் இல்லை என போலீஸார் அறிவிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x