பேருந்துகள் எப்போது வரும் என்பதை அறிந்துகொள்ள நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகை @ சென்னை

எழும்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாநகராட்சி சார்பில் சோதனை அடிப்படையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பலகை |  படங்கள்: எஸ்.சத்தியசீலன் 
எழும்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் மாநகராட்சி சார்பில் சோதனை அடிப்படையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பலகை | படங்கள்: எஸ்.சத்தியசீலன் 
Updated on
1 min read

சென்னை: எதிர்பார்க்கும் பேருந்து எப்போது வரும் என்பதை அறிந்துகொள்ள சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து டிஜிட்டல் பலகைகளை நிறுவ திட்டமிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 387 கி.மீ. நீளமுடைய 471 பேருந்து வழித்தட சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 31 பணிமனைகளில் இருந்து நாள்தோறும் 3,233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு 30 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் பயன்பெற்று வருகின்றனர். சென்னை மாநகரில் நாம் செல்ல விரும்பும் பேருந்து எத்தனை மணிக்கு பேருந்து நிறுத்தத்துக்கு வரும் என்று தெரியாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இவர்களின் வசதிக்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து போக்குவரத்து நுண்ணறிவு திட்டத்தின் கீழ், குறிப்பிட்ட பேருந்து நிலையம் அல்லது நிறுத்தத்துக்கு குறிப்பிட்ட பேருந்து எத்தனை மணிக்கு, எத்தனை நிமிடங்களில் வரும் என்பதை அறிவிக்கும் டிஜிட்டல் பலகை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதற்காக மாநகரில் உள்ள 532 பேருந்து நிறுத்தங்கள், 71 பேருந்து முனையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப 2 வரிகள், 4 வரிகள், 10 வரிகளில் தகவல் தரும் டிஜிட்டல் பலகைகள் நிறுவப்பட உள்ளன. சோதனை அடிப்படையில் எழும்பூர், பல்லவன் சாலை, ராயப்பேட்டை உள்ளிட்ட 8 இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் டிஜிட்டல் பலகைகளை நிறுவியுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘தற்போது சோதனை அடிப்படையில் 50 மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்தி, பேருந்துகள் இயக்க தகவல், சாலை போக்குவரத்து நெரிசல் போன்ற விவரங்களை சேகரித்து, குறிப்பிட்ட பேருந்து, குறிப்பிட்ட பேருந்து நிறுத்த்துக்கு வர வாய்ப்புள்ள நேரத்தை கணித்து, தகவல் பலகையில் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு, அனைத்து பேருந்து நிறுத்தங்கள், முனையங்களில் பேருந்து வருகை குறித்த டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட உள்ளன' என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in