சென்னை மாநகராட்சி சார்பில் உலகத்தரத்தில் 3 இடங்களில் ரூ.20 கோடியில் விலங்கு இன கட்டுப்பாட்டு மையம்

சென்னை மாநகராட்சி சார்பில் உலகத்தரத்தில் 3 இடங்களில் ரூ.20 கோடியில் விலங்கு இன கட்டுப்பாட்டு மையம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் உலகத்தரத்தில் ரூ.20 கோடியில் 3 இடங்களில் விலங்கு இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை வரும் ஜூலையில் பயன்பாட்டுக்கு வர உள்ளன.

சென்னையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரம், நாய்களைப் பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருப்பதால், நாய்கள் பெருக்கத்தையும், அவற்றால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளையும் கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

ஏற்கெனவே, மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கான இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. நவீன அம்சங்கள் எதுவும் இல்லாத இம்மையங்களில் ஆண்டுக்கு சுமார் 16 ஆயிரம் நாய்களுக்கு மட்டுமேகருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும்.

நாய்களால் ஏற்படும் தொந்தரவைக் குறைக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தை தடுக்கவும், நாய்கள் தொடர்பாக வரும் அதிக அளவிலான புகார்களை எதிர்கொள்ளவும் தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லை.

இந்நிலையில் மேற்கூறிய பகுதியில் புதிதாக விலங்கு இனக் கட்டுப்பாட்டு மையங்களை உலகத் தரத்தில் ரூ.20 கோடியில் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, மேற்கூறிய 3 இடங்களில் உலகத்தரத்தில் விலங்கு இனக் கட்டுப்பாட்டு மையங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக மாநகர தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி கமால் உசேன் கூறியதாவது: இத்திட்டம் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, ஆண்டுக்கு 27 ஆயிரம் நாய்களுக்கு இனக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

வெறிநாய்க்கடி தடுப்பூசி போடும் பணிகளும் மேற்கொள்ள முடியும். இம்மையங்களில் புதிதாக ஆய்வகம், எக்ஸ்ரே, ஸ்கேன் மையங்கள், செல்லப்பிராணிகள் சிகிச்சை மையம் ஆகியவை இடம்பெற உள்ளன. துரு பிடிக்காத உலோகத்தாலான 460 கூண்டுகளும் அங்கு அமைக்கப்பட உள்ளன. இந்த 3 மையங்களும் வரும் ஜூலை மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in