ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை @ சென்னை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த 3-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிசியோதெரபி 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அதிக ஈடுபாட்டுடன் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அதில் அதிகளவு பணத்தையும் இழந்துள்ளார். இந்நிலையில், இன்று (மே 16) வீட்டில் இருந்த மாணவர் தனுஷ், மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார்.

அப்போது அவரிடம் பணம் இல்லாததால், தனது தந்தையிடம் வேறொரு காரணம் கூறி பணம் கேட்டுள்ளார். அவரது தந்தை ரூ.4000 பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை வைத்து மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார். அந்த பணத்தையும் இழந்துள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சல் அடைந்த தனுஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது பெற்றோர், மகன் தூக்கில் தொங்கியதைக் கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீஸார் தனுஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in