

சென்னை: பாலியல் புகாரில் கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை மே 22-க்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் கடந்த 1995 - 2001 காலகட்டத்தில் படித்து, தற்போது வெளிநாட்டில் வசிக்கும் முன்னாள் மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியரான ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கடந்த ஏப்.22 அன்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ஸ்ரீஜித் கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற விடுமுறை கால அமர்வில் நீதிபதி ஆர்.சக்திவேல் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் சத்யன், “சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த சம்பவத்துக்கு இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.
புகார் அளித்த இளம்பெண் தரப்பில், “இந்த விவகாரத்தில் தன்னைப்போல பல மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புகாரில் உண்மை இருப்பதால்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மனுதாரரான ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க முன்வரமாட்டார்கள். மேலும், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதியளித்த நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் மே 22-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.