

சென்னை: கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில் கடந்த 2 வாரத்தில் 10 மாணவிகள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
சென்னை திருவான்மியூரில் இயங்கிவரும் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு, பேராசிரியர்களால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, மாநில மகளிர் ஆணையம் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி ஒருவர், சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ‘கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக’ பரபரப்பு புகார் மனுவை அளித்தார்.
இதையடுத்து அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் கலாஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.ஆனால், ஹரி பத்மன் மனைவி, தனது கணவர் மீது வேண்டுமென்றே சிலர் பொய்யான புகாரைதெரிவித்திருப்பதாக குற்றம்சாட்டி யிருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம்தொடர்பாக, 162 மாணவிகளிடம் அடையாறு மகளிர் போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என மகளிர் ஆணையம் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி 162 மாணவிகளுக்கும் அடையாறு அனைத்து மகளிர் போலீஸார் சம்மன் அனுப்பினர்.
சம்மனை ஏற்று கடந்த 2 வாரங்களில் 10 மாணவிகள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இதில் சில மாணவிகள் எங்களுக்கும், இந்த புகாருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
எஞ்சிய மாணவிகளிடமும் வாக்குமூலம் பெற போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிறகே கலாஷேத்ராவில் நடந்தது என்ன என்பது குறித்து தெரியவரும் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.