Published : 16 May 2024 04:12 PM
Last Updated : 16 May 2024 04:12 PM
சென்னை: மழை நேரத்தில் மின் விபத்துகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்றுமாறு பொதுமக்களை மின்ஆய்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக மின் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்: மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ளவர்கள் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற மின்கம்பிகள், சாதனங்களை பயன்படுத்த வேண்டும். பிளக்குகளை பொருத்துவதற்கு, எடுப்பதற்கு முன்னர் சுவிட்சை அணைத்து வைக்க வேண்டும்.
வீட்டு உபயோக பொருட்களுக்கு மூன்று சாக்கெட் உள்ள பிளக்குகளை பயன்படுத்த வேண்டும். 30 எம்ஏ ஆர்சிசிபி அல்லது ஆர்சிபிஒ ஆகிய மின்கசிவு தடுப்பானை மெயின் சுவிட்ச் போர்டில் பொருத்த வேண்டும். சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். மின்சாரத்துக்காக போடப்பட்ட கம்பிகள் மீது துணிகளைக் காயப்போட வேண்டாம்.
மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக் கூடாது. மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்பெட்டி போன்றவற்றின் அருகே செல்ல வேண்டாம். அறுந்து விழுந்த மின்கம்பிகள் குறித்து வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட வாரிய அலுவலர்களை அணுகவும். இடி அல்ல மின்னலின்போது வெட்ட வெளியில் இருக்க வேண்டாம், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பாக அரசு தலைமை மின் ஆய்வாளர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: “எதிர்வரும் தென்மேற்கு பருவமழை போன்ற இயற்கை இடர்பாடுகளின்போது, அறுந்து தரையில் வீழ்ந்து கிடக்கும் மின் கம்பிகளால் ஏற்படும் மின்விபத்துகள் அதிகளவில் நிகழ்கின்றன. இதைத் தடுக்கும் பொருட்டு மின்வழித்தடங்களின் திடம், தொய்வு, மரக்கிளைகளுக்கு இடையேயான பாதுகாப்பு இடைவெளி, இன்சுலேட்டர்களின் சேதமின்மை போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் மின்வழித்தட ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இயற்கை இடர்பாடுகளின்போது எந்நேரமும் முழுவீச்சில் செயல்படும் வகையில் களப்பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்கசிவை தடுக்கும் வகையில் நுகர்வோரின் மெயின் சுவிட்ச் போர்டில் ஈஎல்சிபி கருவி பொருத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பார்வைக்காக வாரியத்தின் அனைத்து அலுவலகங்களின் உள்ள தகவல் பலகைகளில் இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT