காமராசர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா - ‘கன்வீனர்’ கமிட்டி அமைக்க வலியுறுத்தல்

காமராசர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா - ‘கன்வீனர்’ கமிட்டி அமைக்க வலியுறுத்தல்
Updated on
1 min read

மதுரை: மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமாவைத் தொடர்ந்து நிர்வாகத்தை கவனிக்க, விரைந்து ‘கன்வீனர்’ கமிட்டியை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக பணிபுரிந்த கிருஷ்ணன் அவரது பணிக்காலம் முடிவதற்குள் மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்றார். இவருக்கு பதிலாக காமராஜர் பல்கலை துணை வேந்தராக கடந்த 2022 மார்ச் மாதம் சென்னை அண்ணா பல்கலை பேராசிரியர் ஜெ.குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 ஆண்டு பணிக்காலம் நிறைவு பெற, இன்னும் 11 மாதம் இருக்கும் நிலையில், அவர் உடல் நிலை காரணம் காட்டி, பணியில் இருந்து விலக முடிவெடுத்தார்.

இதன்படி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சில நாளுக்கு முன்பு தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். அவரது கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டு,பணியில் இருந்து விடுவிக்கலாம் என அனுமதி வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர், இன்று துணைவேந்தர் பதவியில் இருந்து முறைபடி விலகினார். ஏற்கெனவே, அவரது பல்கலைக்கழக குடியிருப்பு இல்லத்தில் இருந்து உடைமைகளை கொண்டு சென்ற நிலையில், அவரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பல்கலையில் துணை வேந்தர்கள் இல்லாதபோது, அவர்களுக்கு பதிலாக தமிழக அரசின் உயர்கல்வி செயலர் அல்லது பிற துறை செயலர் மற்றும் 2 சிண்டிக்கேட் உறுப்பினர்கள் அடங்கிய ‘கன்வீனர்’ கமிட்டி அமைத்து பல்கலை நிர்வாகத்தை கவனிப்பது வழக்கம். இதன்படி, காமராஜர் பல்கலைக்கும் ‘கன்வீனர்’ கமிட்டியை விரைந்து அமைக்க சிண்டிக் கேட் உறுப்பினர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகு கன்வீனர் கமிட்டி அமைக்கப்படலாம் என, பல்கலைக் கழக நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in