Published : 14 May 2024 06:08 AM
Last Updated : 14 May 2024 06:08 AM
மதுரை: அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநரும், பிரபல கண் மருத்துவருமான ஜி.நாச்சியாருக்கு, அவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருதை கடந்த 9-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
பத்மஸ்ரீ விருது பெற்று மதுரை திரும்பிய ஜி.நாச்சியார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பத்மஸ்ரீ விருது பெற்றது மிகவும் பெருமையாக உள்ளது. இந்த விருது என்னுடைய தனிப்பட்ட உழைப்பு, சேவைக்காக கிடைத்ததாக நான் கருதவில்லை. அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்களுடைய பிரதிநிதியாகத்தான் இந்த விருதைப் பெற்றதாக கருதுகிறேன்.
1976-ம் ஆண்டு சிறியளவில் 11 படுக்கை வசதியுடன் இந்த மருத்துவமனையை தொடங்கினோம். தற்போது 135 இடங்களில் தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனைகள் உள்ளன. இன்று 6 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகிறோம். இதில் 85 சதவீதம் பேர் பெண்கள்.
45 சதவீதம் இலவச மருத்துவ சேவை செய்கிறோம். நாளொன்றுக்கு 15 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் பார்வை கொடுக்க வேண்டும். அந்த பார்வை தரமாக இருக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் நன்கொடை வாங்கக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறோம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ.வில் அரவிந்த் மருத்துவமனை பற்றிய பாடம் உள்ளது.
உலகத்திலேயே கண் மருத்துவமனைக்கு சிறந்த ஆராய்ச்சி மையம் வைத்துள்ளோம். ஆரோ லேப் மூலம் 300 நாடுகளுக்கு கண் மருத்துவக் கருவிகளையும், கண் கண்ணாடிகளையும் ஏற்றுமதி செய்கிறோம். செயற்கைநுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிக அளவில் எங்கள் மருத்துவமனையில் பயன்படுத்தத் தொடங்கிஉள்ளோம். ஒரு மருத்துவமனையில் வெளிநோயாளியாக ஒருமுறை பதிவு செய்தால் அந்தஅடையாள அட்டையைக் கொண்டு தமிழகத்தின் எந்த அரவிந்த் கண் மருத்துவமனையிலும் சிகிச்சை பெறக்கூடிய வசதி உள்ளது.
தற்போது நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்றவுடனே ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மருத்துவர்கள், அவர்களுடையபணி அனுபவஅறிவைக் கொண்டே 98 சதவீதநோய்களைக் கண்டறிந்துவிடலாம். அவசியம்இருந்தால் மட்டுமே ஸ்கேன், ஆய்வக பரிசோதனைகளை செய்யுமாறு பரிந்துரைக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையற்ற மருத்துவப் பரிசோதனைகளை மருத்துவர்கள் தவிர்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT