

சென்னை: கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிகின்றனர்.
தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் போக்குவரத்து ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்டோருக்கு ஓஆர்எஸ் கரைசல் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் அனைத்து பணிமனை, பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, பேருந்து ஓட்டுநர் இருக்கையின் மேல்புறத்தில் மின்விசிறி அமைக்கும் நடவடிக்கையையும் மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.
அனைத்து பேருந்துகளிலும்.. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: பேருந்து ஓட்டுநர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் முதல்கட்டமாக சுமார் 1,000 பேருந்துகளில் மின்விசிறி அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 250-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.