Published : 13 May 2024 12:31 AM
Last Updated : 13 May 2024 12:31 AM

விதிமீறும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ

துரை வைகோ | கோப்புப்படம்

சிவகாசி: 90 சதவீதம் உரிமையாளர்கள், மிகுந்த சிரமத்திற்கு இடையே பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 10 சதவீதம் பேர் செய்யும் விதிமீறலால் ஒட்டுமொத்த பட்டாசு தொழிலுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. விதிமீறும் ஆலை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசியில் துரை வைகோ தெரிவித்தார்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9-ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் ,14 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய சேனை, மேல சின்னையாபுரம், வி. சொக்கலிங்கபுரம், சிவகாசி சிலோன் காலனி, நேருஜி நகர், இந்திரா நகர், பாறைப்பட்டி, அய்யம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன்பின் துரை வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது. விருதுநகர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலை நம்பி உள்ளனர். வேறு வேலை வாய்ப்புகள் இல்லாததால் ஆபத்தான இந்த தொழிலில் உயிரை பணயம் வைத்து பட்டாசு உற்பத்தி செய்கின்றனர். பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தடுக்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நல்ல சட்டங்களை கொண்டு வந்து, விதிகளை கடுமையாக்கி வருகிறது.

அரசின் சட்டங்கள் மற்றும் விதிகளை கடைபிடிக்க வேண்டியது ஆலை உரிமையாளர்களின் கடமை. கூடுதலாக லாபம் சம்பாதிப்பதற்காக அதிக தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்வதால் விபத்து ஏற்படுகிறது. 90 சதவீதம் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 10 சதவீதம் பேர் சட்டவிரோதமாக செயல்படுவதால், உயிரிழப்புகள் ஏற்பட்டு, பட்டாசு தொழிலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் ராமாயன்பட்டியில் நடந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் நேரில் சந்தித்தேன். கடந்த 5 மாதத்தில் நடந்த 11 விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 5 வயதுக்கும் குறைவான குழந்தைகள் தாய், தந்தை என இருவரையும் இழந்துள்ளனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

தற்போது பட்டாசு தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் நிலையில் சிலர் செய்யும் தவறுகளால், நேர்மையாக தொழில் செய்பவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலை மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் சாத்தூர் எம்எல்ஏ ரகுராமன், மதிமுக துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் எம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x