சவுக்கு சங்கர் மீண்டும் கோவை சிறையில் அடைப்பு

சவுக்கு சங்கர் மீண்டும் கோவை சிறையில் அடைப்பு
Updated on
1 min read

கோவை: காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கடந்த 4-ம் தேதி சவுக்கு என்ற யு டியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர், சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி போலீஸார், அவதூறு வழக்கு தொடர்பாக சென்னை, திருச்சி போலீஸார் சவுக்கு சங்கரை அடுத்தடுத்து கைது செய்தனர்.

விசாரணைக்கு ஆஜர்படுத்த சவுக்கு சங்கரை, போலீஸார் நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சவுக்கு சங்கர் மீண்டும் நேற்று காலை கோவைக்கு அழைத்துவரப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பெலிக்ஸ் ஜெரால்டு கைது: இதனிடையே, பெண் போலீஸாரை சவுக்கு சங்கர் அவதூறாகப் பேசியதாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின், திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில், சங்கர் மீதும், அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டெல்லியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை, திருச்சியிலிருந்து சென்ற தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், அவரை திருச்சிக்குஅழைத்து வந்து, சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in