விபத்து நடந்த ஆலை
விபத்து நடந்த ஆலை

10 பேர் உயிரிழந்த சம்பவம்: சிவகாசி பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து - பெசோ நடவடிக்கை

Published on

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலபட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், அந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உத்தரவிட்டுள்ளது.

சிவகாசி அருகே செங்கமலபட்டியில் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(பெசோ) உரிமம் பெற்று இயங்கி வந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த வியாழக்கிழமை நடந்த வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

விசாரணையில் ஆலையை விதிமீறி குத்தகைக்கு விட்டது, கூடுதல் பணியாளர்களை கொண்டு மரத்தடியில் வைத்து பட்டாசு உற்பத்தி செய்தது, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான அளவு வெடி மருந்துகளை கையாண்டது, கடந்த ஓராண்டாக பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்தது, தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் பேன்சி ரக பட்டாசு உற்பத்தி செய்தது உள்ளிட்ட விதிமீறல்களால் விபத்து நிகழ்ந்தும் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பட்டாசு அலையின் உரிமம் 2026-ம் ஆண்டு வரை உள்ள நிலையில் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in